சொர்க்கம்

செப்ரெம்பர் 9, 2008
மண்ணில் தெரியுது சொர்க்கம்

சொர்க்கம் என்பது எங்கே உள்ளது
சொலவா முடியாது
நற்கரு ணையுடன் மானுடம் நடந்தால்
நமைவிட மேல் ஏது

மண்ணில் தெரியுது சொர்க்கம் காண
மானுடரே வாங்க
கண்ணில் தெரியும் காட்சியை விட்டுக்
கதைகள் ஏன் போங்க

பகைவனை மோதிச் சுட்டுவி டாமல்
பாசம் பொழியுங்க
புகைச்சல் மறந்து புறப்பட்டு வாங்க
போரை அழியுங்க

எல்லா மனிதரும் ஏவாள் பிள்ளை
என்றால் ஏன் சண்டை
வல்லான் இல்லான் என்றில்லாமல்
வசிப்போம் ஊராண்டை

காலையிற் பகைவனைத் தியானம் செய்க
காதலில் ஆழ்ந்திடுக
மாலையில் அவனே மயங்கிச் சிரிப்பான்
மனம்போல் வாழ்ந்திடுக

உர்ரென மூஞ்சியை வைக்க தீங்க
உடனே சிரியுங்க
விர்என வெளியே வாங்க அங்கே
விண்ணைப் பிடியுங்க

சண்டை களுக்குள் நேரம் தொலையுது
சவத்தைத் தள்ளுங்க
அண்டை களுக்குள் அன்பைத் தெளிங்க
அனுபவம் கொள்ளுங்க

மனிதர்எல் லோரும் மனுவின் பிள்ளை
மறுபடி ஏன் சண்டை
பனிமனி தர்முதல் புனிதர்க ளோடு
பழகுக வீட்டாண்டை

புத்தன் ஏசு போதித் தார்கள்
போற்றுக நற்றொண்டை
நித்தம் நித்தம் முழக்குக முழக்கி
நெகிழுக நம் தொண்டை

நாம் எல்லோரும் நபியின் பிள்ளை
நமக்குள் ஏன் சண்டை
பூமியிற் போர்கள் முடிந்தன முடிந்தன
போனது நாள் பண்டை

மானுட சக்தியின் மகத்துவம் கேட்க
மக்காள் வாருங்க
தேனிடம் இனிமை கேளுங்க கொட்டும்
தேளிடம் ஏனுங்க

அலுவல கத்தில் பாஸ்மேல் கொஞ்சம்
அன்பைத் தெளியுங்க
கலகலப் பாகப் பேசுங்க சிரிப்பில்
காதலைப் பிழியுங்க

குழந்தைகள் டீவியைக் காதலித் தால்அக்
குற்றம் உமதுங்க
வழிந்தே பாசம் பொழிந்தால் அந்த
வகையும் உமதுங்க

கவனம் கண்ணை மூடுங்க உள்ளக்
கதவைத் திறவுங்க
நவநவமான உலகம் உமக்கே
நட்பாய்ப் பரவுங்க

மனைவியின் முகத்தை பிடியுங்க அவளை
மனம் போல் சுத்துங்க
கனிவாள் உமையே கவனிப் பாள் எனில்
கவலைகள் வெத்துங்க

மகுடதீபன்

Follow

Get every new post delivered to your Inbox.